Adsterra

கர்நாடக மாநில சட்ட மேலவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,744 கோடி: பாஜக, மஜதவிலும் கோடீஸ்வரர்களுக்கே வாய்ப்பு | Opportunity for millionaires

கர்நாடக மாநில சட்ட மேலவை தேர்தலில் ரூ.1,744 கோடி மதிப்பிலான சொத்துகளை கொண்ட மெகா கோடீஸ்வரர் யூசுப் ஷெரிப்புக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்ட மேலவையில் காலியாகும் 25 இடங்களுக்கான தேர்தல், வரும் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்றும் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற மூன்று கட்சிகளும் போட்டிப்போட்டு கொண்டு செல்வாக்கு மிகுந்த நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

காங்கிரஸ் சார்பில் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் யூசுப் ஷெரிப் (54), தனக்கு ரூ.1,744 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, ”கோலார் தங்கவயலை சேர்ந்த யூசுப் ஷெரிப், 5ம் வகுப்பு வரைபடித்துள்ளார். ரியல் எஸ்டேட், தங்க சுரங்கத்தில் தங்க தாதுக்களை சுத்தம் செய்யும் தொழில் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

யூசுப் ஷெரிப்பின் பெயரில் ரூ.97.98 லட்சம் அசையும் சொத்து, ரூ.1,643.59 கோடி அசையா சொத்து இருக்கிறது. தனது முதல் மனைவியின் பெயரில் ரூ.98.96 லட்சம் அசையும் சொத்து, ரூ.1.3 கோடி அசையா சொத்து இருக்கிறது. தனது 2வது மனைவியின் பெயரில் ரூ.32.22 லட்சம் அசையும் சொத்தும், மற்ற சொத்துகள் தனது 5 பிள்ளைகளின் பெயரில் உள்ளது.

இதேபோல, யூசுப் ஷெரிப்பிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட ரூ.3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வாகனங்களும், ரூ.3.85 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளும் இருக்கின்றன. அவர் மீது பெங்களூருவில் ஆள் கடத்தல், பாலியல் தொந்தரவு, சொத்துகளை மிரட்டி வாங்கியது உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், வருமான வரித்துறையினருக்கு ரூ.13.43 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத மெகா கோடீஸ்வரருக்கு எம்எல்சி வழங்கி இருப்பதை அக்கட்சியினரே விமர்சித்துள்ளனர். பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, ”இவரைப் போன்ற பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட கோடீஸ்வரருக்கு காங்கிரஸ் சீட் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது”என விமர்சித்துள்ளார்.

அதே வேளையில், பாஜகவில் பெல்லாரி தொகுதியில் ரூ.112 கோடி சொத்து வைத்துள்ள சதீஷ், மண்டியா தொகுதியில் ரூ.70 கோடி சொத்துகொண்ட பி.சி.மஞ்சுநாத் உள்ளிட்ட கோடீஸ்வரர்களுக்கு சீட்வழங்கியுள்ளது. இதே போல,மஜதவும் ரூ.89 கோடி சொத்துகளை கொண்ட ஹெ.எம்.ரமேஷ்கவுடாவை பெங்களூரு ஊரக தொகுதியிலும், மண்டியா தொகுதியில் ரூ.88 கோடி சொத்துகளை கொண்ட அப்பாஜி கவுடாவுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.



Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: