Adsterra

900 கோடி ரூபாயில் புதிய மழை நீர் கால்வாய் திட்டம்| Dinamalar


பெங்களூரு : ”ஏரிகள் நிரம்பி, தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில், 900 கோடி ரூபாயில் புதிய மழை நீர் கால்வாய் அமைக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு நகரில் நவம்பர் மாதத்தில் கன மழை பெய்து பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மக்கள் அவதிப்பட்டனர்.ஏரிகள், மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் அதிகரித்துள்ளன.

ஆலோசனை இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை உயர் அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். பெங்களூரை சேர்ந்த சோமண்ணா, அஸ்வத் நாராயணா, கோபாலய்யா, சோமசேகர், முனிரத்னா, பைரதி பசவராஜ், மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா உட்பட பலர் பங்கேற்றனர்.நீண்ட நேர ஆலோசனைக்கு பின், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:பெங்களூரில் இரண்டு மாதங்களாக தொடர்ந்து மழை பெய்தது

நகரின் அனைத்து ஏரிகளும் நிரம்பியதால் தாழ்வான குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.எனவே, மழை நீர் கால்வாய்கள் சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் இணைக்கப்பட்ட 110 கிராமங்களில் மண்ணால் ஆன மழை நீர் கால்வாய்கள் உள்ளன. அவற்றையும் சரி செய்யப்பட வேண்டும்.சில கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஹெப்பால், விருஷபாவதி, செல்லகட்டா, கோரமங்களா ஆகிய நான்கு பெரிய கால்வாய்கள் உள்ளன. மொத்தம், 842 கி.மீ., தொலைவுக்கு மழை நீர் கால்வாய்கள் உள்ளன. 115 கி.மீ., கால்வாய் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதில், 94 அபாயகரமான பகுதிகள் உள்ளன. அவற்றை இரண்டு மாதங்களுக்குள் சீரமைக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். முதல் கட்டமாக, 51 கி.மீ.,க்கும் இரண்டாம் கட்டத்தில் 37 கி.மீ., தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படும்.சிறப்பு நிதி இதற்காக, 900 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரித்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள், உடனடியாக சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அறுவுறுத்தியுள்ளேன்.அனைத்து கால்வாய்களும் துார்வாரப்படும்.நிரந்தர தீர்வு காணப்படும்.

கால்வாயிலிருந்து, ஏரி வாயிலாக ஆற்றில் கலக்கும் வரை சரி செய்யப்படும். ஒப்பந்த அடிப்படையில் 138 பொறியாளர்கள் நியமிக்கப்படுவர். சாலை பள்ளங்கள் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, ஹொரமாவு வார்டின் பி.டி.எஸ்., நகரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார்.



Source link

Leave a Reply

Adsterra
%d bloggers like this: